ஒரே நேரத்தில் தேர்தல் ; அதிமுக எதிர்ப்பு : பயம் காரணமா?

வெள்ளி, 6 ஜூலை 2018 (13:59 IST)
சட்டசபை மற்றும் பாராளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனாலும், தமிழக அரசு பாஜகவே இயக்குகிறது என திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில், சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தலை ஒரே நடத்தில் நடத்தலாம் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தது.
 
இதையடுத்து, அதிமுக சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளார் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாளை டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
 
அதாவது, தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரலாம் என பலரும் கூறி வருகின்றனர். ஏனெனில், தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசு 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் போதே, தமிழகத்திலும் சட்டமன்ற தேர்தலை நடத்த திட்டமிட்டிருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
 
எனவே, அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே அதிமுக தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்