ஆடி பௌர்ணமி, கிரிவலம், கள்ளழகர் திருவிழா! கலகலக்கும் கோவில்கள்!

Prasanth Karthick

ஞாயிறு, 21 ஜூலை 2024 (10:01 IST)

ஆடி மாதம் தொடங்கியுள்ள நிலையில் முதல் வாரமே திருவிழாக்களால் தமிழக கோவில்கள் கலகலத்து வருகிறது.

கடந்த வியாழக்கிழமை ஆடி மாதம் தொடங்கிய நிலையில், அம்மன் கோவில்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள் என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை அன்றே பிரபலமான அம்மன் கோவில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆடி பௌர்ணமி என்பதால் பல கோவில்களிலும் விசேஷங்களாக காணப்படுகின்றன. ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில் கூழும், மீனும் வார்ப்பது வழக்கம் என்பதால் இன்று காலையே சென்னை காசிமேடு மீன் சந்தையில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. 

ஆடி பௌர்ணமிக்கு திருவண்ணாமலையில் கிரிவலம் தொடங்கியுள்ள நிலையில் காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருவதால் கூட்டம் அதிகமாக உள்ளது. 

மதுரை கள்ளழகர் கோவிலில் ஆடி பெரும் திருவிழா நடந்து வரும் நிலையில் 9வது நாளான இன்று திருவிழாவின் உச்சமாக தேரோட்டம் கோலாகலமாக நடந்து வருகிறது. இதற்காக மதுரையில் மட்டுமல்லாமல் தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி என பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் குவிந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் ஆடி பௌர்ணமி காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல சிவன் கோவில்களிலும் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்