மிக்ஜாம் புயல் தாக்குதல் மற்றும் அதிகனமழையால் சென்னை முழுவதும் வெள்ளம் சூழ்ந்தன. இதில் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இவர்களுக்கு தமிழக அரசுடன் இணைந்து தன்னார்வலர்களும், சினிமாத்துறையினரும், தொழில் நிறுவனங்களும் நிவாரண உதவிகள் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மிக்ஜாம் புயல் - கன மழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நிவாரணப் பணிகளை மேலும் வலுப்படுத்துகிற வகையில் பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், அரசின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதி-க்கு திரைப்பட நடிகர் - சகோதரர் விஷ்ணு விஷால் , ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும் நன்றியும்என்று தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு எம்.ஆர்.எப் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. அருண் மேமன், நிர்வாக இயக்குநர் திரு. ராகுல் மேமன் மாப்பிள்ளை ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 3 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள்.
டால்மியா குழுமத்தின் தலைவர் மற்றும் செயல் இயக்குநர் திரு. அர்மித் சிங் சேத்தி அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடிக்கான காசோலையை வழங்கியதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.