நடிகர் பாலாஜி மீது கமிஷனர் அலுவலகத்தில் மனைவி புகார்...

சனி, 1 ஜூலை 2017 (16:23 IST)
நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி மீது அவரது காதல் மனைவி நித்யா இன்று சென்னை கமிஷனர் அலுலகத்தில் புகார் அளித்துள்ளார்.


 

 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும், பல தமிழ் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்தவருமான நடிகர் தாடி பாலாஜி, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு போர்ஷிகா என்ற 6 வயது பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது. 
 
அந்நிலையில் கடந்த மே மாதம் நித்யா தனது கணவர் தாடி பாலாஜி மீது மாதவரம் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் பாலாஜி தன்னை ஜாதி பெயரை சொல்லி திட்டுவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதன் தொடர்பாக இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து ஆலோசனை வழங்கினர். அப்போது, ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்ததை மறைத்து தன்னை ஏமாற்றி பாலாஜி திருமணம் செய்து கொண்டார் என்பது உட்பட பல புகார்களை நித்யா கூறினார். அதற்கு பாலாஜி எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. மேலும், இருவரையும் ஒன்று சேர்க்க போலீசார் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.


 

 
அதுபற்றி கருத்து தெரிவித்த பாலாஜி “முதல் மனைவியை விவகாரத்து செய்தபிறகே நித்யாவை திருமணம் செய்தேன். எல்லாமும் அவருக்குத் தெரியும். என்னை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து, ஜெயிலில் அடைக்க வேண்டும் என்பதே என் மனைவி தரப்பினரின் குறிக்கோளாக உள்ளது. என் மனைவி ஆசைப்பட்டால் அவருக்காக ஜெயிலுக்கு போகவும் நான் தயார். அதற்கு முன்பு என் மனைவி கடந்த கால வாழ்க்கையை கொஞ்சம் நினைத்துப்பார்க்க வேண்டும்" என கூறியிருந்தார்.
 
இந்நிலையில், சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நித்யா, இன்று தனது கணவர் பாலாஜி மீது மீண்டும் ஒரு புகார் மனு அளித்தார். அதில் “தனது கணவர் பாலாஜி தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, சாதி பெயர் சொல்லி என்னை இழிவுபடுத்தி பேசியும், என்னை பல முறை அடித்தும் கடுமையான தொல்லை கொடுத்து வந்தார். மேலும், பல ஆண்களுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறி என்னை சித்ரவதை செய்து வந்தார். அவர் மீது ஏற்கனவே போலீசாரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்