பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஆட்டோ கட்டணம் உயர்வதாகவும் முதல் இரண்டு கிலோமீட்டருக்கு 50 ரூபாய் அதன் பின் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 18 ரூபாய் என்ற அளவில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்டோ சங்கங்கள் தெரிவித்துள்ளது. மேலும் இரவு நேரத்தில் பயணம் செய்தால் பகல் நேரத்தை விட கூடுதலாக 50 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் இந்த புதிய கட்டணம் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் போக்குவரத்து துறை இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஆட்டோ கட்டண உயர்வு குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முடிவு பரிசீலனையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது என்றும் கூடுதல் ஆட்டோ கட்டணம் வசூலித்தால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.