முன்னாள் முதல்வர் ஜெயலிலிதா மரணத்திற்கு முன் சுமார் 75 நாட்கள் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அந்த நாட்களில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவைத் தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடிப்பதற்காக தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்தது. இந்த ஆணையம் இதுவரை 100க்கும் மேற்பட்டோரை விசாரித்துள்ளது.
இந்த ஆணை யம் தற்போது விசாரணையின் இறுதிக்கட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அதிமுக பிரமுகர்கள் பலருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அறைக்கு வெளியே சுமார் 50 நாட்கள் இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவரும் அவர்தான். எனவே, ஜெயலலிதா மரணம் குறித்து அவரிடம் முதலில் விசாரணை நடத்த வேண்டும் என்று சசிகலா தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
இதனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை வரும் 20-ம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ்.-ஐப் போல சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 18-ம் தேதியும், செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்றும் (14-ம் தேதி) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சர்ச்சைக் கருத்தைக் கூறிய அமைச்சர் பொன்னையனையும் 18-ம் தேதி நேரில் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இவர் காஞ்சிபுரத்தில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் ‘ஜெயலலிதாவுக்கு சசிகலா குடும்பத்தினர் எட்டு மாதமாக ஸ்லோ பாய்சன் கொடுத்து வந்துள்ளனர். இதனால்தான் ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டார்’ எனக் கூறியிருந்தார்.