சென்னையில் காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவரை காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த திமுக பிரமுகரின் பேரன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
காதல் விவகாரம்:
மயிலாப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் வெங்கடேஷ் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண்ணின் ஆண் நண்பர் பிரணவ் என்பவருக்கும், வெங்கடேஷுக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. பிரணவ் தனது நண்பர்களான ஆரோன், திமுக பிரமுகரின் பேரன் சந்துரு ஆகியோருடன் வந்து வெங்கடேஷை திருமங்கலம் எஸ்பிஓஏ பள்ளி சாலையில் வைத்து தாக்கியுள்ளனர்.
கொலையில் முடிந்த மோதல்:
இதனால் வெங்கடேஷ் தனது அண்ணனின் நண்பரான நித்தின் சாயை உதவிக்கு அழைத்துள்ளார். அப்போது அண்ணா நகரில் தனது நண்பர்களோடு பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் இருந்த நித்தின் சாய் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு வெங்கடேஷ் இருந்த இடத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு பிரணவ் கும்பலுக்கும், இவர்களுக்கும் இடையே கைகலப்பான நிலையில் நித்தின் சாய் மற்றும் சிலர் ஆரோன் என்பவரின் சொகுசு காரில் கல்லை வீசித் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஆரோன், சந்துரு காரை எடுத்துக் கொண்டு சென்று நித்தின் சாயின் நண்பர் ஒருவர் மீது ஏற்றி காயப்படுத்தியுள்ளனர்.
இதனால் நித்தின் சாயின் நண்பர்கள் நான்கு புறமும் ஓடிய நிலையில் நித்தின் சாயும், அவரது நண்பர் அபிஷேக்கும் இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியுள்ளனர். அவர்களை ஆவேசமாக காரில் துரத்திச் சென்ற ஆரோன் மற்றும் சந்துரு காரை மோதியதில் நித்தின் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், அபிஷேக் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலைமறைவான பிரமுகர் பேரன்:
இந்த சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்த திருமங்கலம் போலீஸார் பிரணவ், காரை இயக்கிய ஆரோனை கைது செய்த நிலையில், சந்துரு, சுதன், எட்வின் ஆகியோர் தலைமறைவானார்கள். அதன்பின்னர் சந்துரு தற்போது போலீஸில் சரணடைந்துள்ளார்.
சந்துரு அளித்த வாக்குமூலம்:
திமுக பிரமுகர் தனசேகரனின் பேரனான சந்துரு அளித்த வாக்குமூலத்தில், நித்தினை கொல்வதற்கு முயற்சிக்கவில்லை என்றும், காரை வேகமாக இயக்கி அவர்களை பயமுறுத்த முயன்றதாகவும், அது விபத்தில் முடிந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் தான் காரை இயக்கவில்லை என்றும், நண்பர்களோடு காரில் மட்டுமே இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த கொலை சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K