தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதியா? திடுக்கிடும் தகவல்

ஞாயிறு, 14 ஜூலை 2019 (12:50 IST)
தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஒரு திடுக்கிடும் செய்தி வெளியாகி உள்ளது.

இந்தியாவில் ஆங்காங்கே பயங்கரவாத தாக்குதல், அவ்வப்போது நடந்துவருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு, புலனாய்வு அதிகாரிகளுடனும், தேசிய உளவுப்பிரிவினருடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது இந்தியா முழுவதும், கடந்த 4 மாதங்களாக தேசியப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

ஐ.எஸ்.ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட இலங்கை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, இந்தியாவிலும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமுட்டுள்ளதாக கிடைத்த பல தகவல்களின் அடிப்படையிலேயே இவ்வாறு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டனர். இந்நிலையில் இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளிடம், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில், பயங்கரவாத ஆதரவளர்கள் தொடர்பு கொண்டு பேசியிருப்பது தெரிய வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு பூந்தமல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த இலங்கை வாலிபர் ஒருவர், இலங்கை பயங்கரவாத குண்டு வெடிப்பு தலைவருடன் தொடர்பில் இருந்ததாக தெரியவந்து கைது செய்யப்பட்டார். இவருடன் சென்னையில் பலரும் நெருங்கிய நட்புடன் இருந்தது தெரியவந்தது. அந்த நபர்களெல்லாம் யார் யாரென என விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று சென்னை மற்றும் நாகப்பட்டினத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

மண்ணடியில் லிங்குசெட்டி தெருவில் அமைந்துள்ள ‘வகாத்- இ-இஸ்லாமி ஹிந்த்’ என்ற அமைப்பின் தலைவரான சையது புகாரியின் வீட்டில், போலீஸ் சூப்பிரண்டு ராகுல் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் செல்ஃபோன்கள், லேப்டாப்கள், பெண்டிரைவ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

பின்பு சையத் புகாரியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கிண்டியில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே சையத்தின் கூட்டாளிகள் இருவரும் அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.

அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே நாகப்பட்டினத்தில் ஹசன் அலி மாரிக்கர், முகமது யூசுப்கான் ஆகிய 2 பேரின் வீடுகளும் சோதனை நடத்தப்பட்டு, செல்ஃபோன்கள், லேப்டாப்கள் ஆகியவைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ஹசன் அலி மற்றும் முகமது யூசுப்கான் ஆகியோர், நாகப்பட்டனம் போலீஸாரால் விசாரிக்கப்பட்டு, பின்பு சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தமிழகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கான சதி திட்டம் தீட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இதன் அடுத்தக்கட்ட விசாரணையை என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த விசாரனையின் முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்