இலங்கையில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 இளைஞர்களை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கேரளாவில் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன்கள், சிம் கார்டுகள், பென் டிரைவ்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
"இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட்ட 8 இடங்களில், ஈஸ்டர் பண்டிகை தினமான கடந்த 21-ம் தேதி நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. எனினும், உள்நாட்டு தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்துக்கும் தொடர்பு இருப்பதாக இலங்கை அரசு சந்தேகிக்கிறது. இதையடுத்து, இலங்கையில் தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நடந்த சோதனையின்போது, தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்தியாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப் பாக இலங்கையிலிருந்து தீவிரவாதிகள் தப்பி இந்தியாவுக்குள் ஊடுருவுவதைத் தடுக்க கடற் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஐஎஸ் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது." என்கிறது அந்நாளிதழ்.