பிக்பாஸ் விக்ரமன் 15 பெண்களை ஏமாற்றினார்.. இளம்பெண் அதிர்ச்சி புகார்..!
ஞாயிறு, 16 ஜூலை 2023 (16:26 IST)
பிக்பாஸ் விக்ரமனுக்கு எதிராக கிருபா முனுசாமி என்ற பெண் சமூக வலைத்தளங்களில் புகார் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
கடந்த சில மாதங்களாக மிகுந்த வேதனையையும் பெரும் ஏமாற்றத்தையும் அனுபவித்த பிறகு, நான் பொதுவில் இதை எழுதுகிறேன். 2013 ஆம் ஆண்டில் நான் விருந்தினராக கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் ஆர். விக்ரமனும் பங்கேற்றார். அதன்பின் விழா முடித்து ஆகஸ்ட் 2020 இல் நான் லண்டனுக்குப் புறப்பட்டபோது, அவர் தானாக முன்வந்து என்னை அனுப்ப விமான நிலையத்திற்கு வந்தார்.
அதன்பின் இரண்டு மாதங்கள் கழித்து அக்டோபர் 2020ல் என்னுடன் காதலுடன் அவர் பேச தொடங்கினார். வெறும் 2 நாட்கள் கழித்து தன்னை விசிக கட்சியில் சேர நிர்வாகிகள் அழைத்ததாக என்னிடம் பொய் சொன்னார். அதன்பின்தான் அவரே முயன்று விசிகவில் சேர்ந்தது எனக்கு தெரிந்தது. அவர் தன்னுடைய அரசியல் கொள்கைகளுக்கு முழுமையான ஆதரவு வேண்டும் என்றும் கேட்டார்.
இதையடுத்து அவர் அரசியல் ரீதியாக, அறிவு ரீதியாக, பண ரீதியாக செய்யும் சுரண்டல்களையும், சந்தர்ப்ப வாதங்களையும் நான் கேள்வி கேட்டேன். இதையடுத்து அவர் என்னிடம் அச்சுறுத்தும் விதமாகவும் , ஜாதிய ரீதியாகவும் நடந்து கொண்டார். இதையடுத்து நான் அவரிடம் இருந்து விலகிய சமயங்களில் எல்லாம் அவர் என்னிடம் கண்ணீர் வடிப்பது, கெஞ்சுவது, நான் இனி நன்றாக நடந்து கொள்வேன் என்று கூறுவது என்று குணங்களை காட்டினார்.
ஆனால் அவரின் இந்த குணம் தொடர்ந்து வந்தது. அவர் மாறவே இல்லை. மாறாக அவர் என் மீது குற்றச்சாட்டுகளை வைக்க தொடங்கினார். சுமார் 2 வருட உறவுக்குப் பிறகு, நான் அவருக்கு சப்போர்ட் செய்வதை நிறுத்தினேன், ஜூலை 22-ல் அவர் திருப்பித் தருவதாகக் கூறிய பணத்தைக் கேட்டபோது, அவர் என்னைத் பிளாக் செய்தார். 3 மாத முயற்சிக்குப் பிறகு, பிக் பாஸில் நுழைவதற்கு முன்பு, அவர் தனது முரட்டுத்தனமான நடத்தைக்கு மன்னிப்பு கேட்டார்;
அதன்பின் மீண்டும் நாங்கள் ஒன்றாக இணைந்தோம், காதலுடன் இருந்தோம். அதேபோல் பிக்பாஸ் பற்றி விவாதத்தித்தோம்.அதன்பின் நாங்கள் பிக்பாஸ் முடிந்தும் காதலை தொடர்ந்தோம். அந்த காலம் எல்லாம் என்னை துன்புறுத்தி, மன்னிப்பு கேட்டு, என்னை பயன்படுத்திக்கொண்டு இருந்தார். அதோடு தன்னுடைய மேனேஜர் என்று ஒரு பெண்ணை சொல்லிவிட்டு, அந்த பெண்ணுடன் இவர் நெருக்கமாக இருந்து என்னை ஏமாற்றி வந்துள்ளார் என்பதை கண்டுபிடித்தேன்.
அவருடன் நான் போனில் கான்பிரன்ஸ் கால் செய்து விசாரித்த பின் தான் இப்படி செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அந்த பெண்ணுடன் காதலில் கடந்த ஒன்றரை வருடமாக இருந்தது அவரிடம் விசாரணை செய்ததில் தெரிய வந்தது. அதன்பின் விக்ரமன் தன்னுடைய முன்னாள் காதலிகள் என்று கூறிய 15க்கும் மேற்பட்டோரிடம் பேசினேன்.அதில்தான் விக்ரமன் பலரையும் ஏமாற்றியது எனக்கு தெரிந்தது. அவர்களில் பலருக்கு தற்போது திருமணம் ஆகிவிட்டது. அதேபோல் சில ஆண்களை கூட இவர் ஏமாற்றி உள்ளார். இதனால் விக்ரமன் மீது நான் புகார் கொடுக்க போவதாக கூறினேன்.
இதையடுத்து உனக்கு சின்ன ஆட்களை மட்டுமே தெரியும். ஆனால் எனக்கு அரசியல் ரீதியாக பெரிய குழு உள்ளது என்று கூறி என்னை மிரட்டினார். அதோடு விசிக திருமாவளவன் ஆதரவையும் கேட்டார். இதனால் நான் அவருக்கு எதிராக 20 பக்க புகாரை கட்சியிடம் கொடுத்தேன். இதையடுத்து தொடக்க விசாரணை மற்றும் முதன்மை சாட்சியத்தின் அடிப்படையில் கட்சித் தலைவர் திருமா 2 வெளி உறுப்பினர்களைக் கொண்ட 5 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்க சொன்னார். 20 நாட்களுக்குள் விசாரித்து அதன் அறிக்கையை சமர்ப்பிக்க சொன்னார்.
காதலித்து ஏமாற்றுவது, முறைகேடு, நிதி மோசடி ஆகியவற்றை நிரூபிக்கும் ஆவண ஆதாரங்கள், 8 சாட்சி ஆதாரங்களை இதில் நான் சமர்ப்பித்தேன். இந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க 40 நாட்கள் எடுத்துக் கொண்டது. ஒரு மாதமாகியும், அறிக்கையின் நகல் எனக்கு வழங்கப்படவில்லை. நான் ஒரு மாதமாக இடைவிடாமல் முயற்சி செய்து வருகிறேன். குழு உறுப்பினர்கள் என்னிடம் அறிக்கையை கொடுக்கவில்லை . அலுவலகப் பணியாளர்கள் அதைப் பற்றி பேச பயப்படுகிறார்கள், அந்த அறிக்கையைப் பகிர்ந்து கொள்ள பயப்படுகிறார்கள்.
விக்ரமனுக்கு எதிரான புகார்கள் உண்மையானது என்று அந்த அறிக்கை வந்ததாக கேள்விப்பட்டேன். அதோடு அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டதாக தெரிகிறது. அதனால்தான் திருமா என்னிடம் அந்த அறிக்கையை காட்டாமல் இருக்கிறாரா? என்னை பல்வேறு வகைகளில் அவர் ஏமாற்றி உள்ளார். அவர் ஐபோன், ஆப்பிள் வாட்ச், ஏர்போட்கள் என்று வாங்கியவை எல்லாம் என்னிடமிருந்து சுரண்டப்பட்டவை. அவர் ஒரு யூடியூப் சேனலை நடத்த போவதாக கூறி ஆப்பிள் லேப்டாப்பை வாங்கும்படி என்னை சித்திரவதை செய்தார். ஆனால் அதை தொடங்க கூட இல்லை அவர் தனக்குச் சொந்தமான காருக்கான டவுன்பேமென்ட் EMIகளை என்னிடம் இருந்து கட்டாயப்படுத்தி வாங்கினார், என்று அந்த பெண் தனது புகாரில் கூறி உள்ளார்."