வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர்களுக்கு பணி: விதிகளும் தளர்த்தப்பட்டது!

வியாழன், 20 மே 2021 (08:24 IST)
வெளிநாட்டில் மருத்துவம் படித்த 500 மருத்துவ மாணவர்களை தமிழகத்தில் பணி செய்ய அனுமதி அளித்ததோடு அவர்களுக்கான விதியையும் தளர்த்தி தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் வெளிநாட்டில் படித்து வந்திருக்கும் மருத்துவ மாணவர்களை பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. இதனை அடுத்து வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர்கள் மருத்துவ பணியை தொடங்க தமிழக சுகாதாரத் துறை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது 
 
மேலும் ஏற்கனவே நடைமுறையில் இருந்த இரண்டு விதிகளையும் தமிழக அரசு தளர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிநாட்டில் மருத்துவ படிப்பு படித்தவர்கள் தமிழகத்தில் பயிற்சி பெறும் வகையில் ஓராண்டு பணிபுரிந்த பின்பே மருத்துவ பணி செய்ய வேண்டும் என்ற விதியும், வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் பயிற்சியின்போது ஐந்து லட்ச ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதியும் தளர்த்தப்பட்டுள்ளது
 
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கும் காரணத்தால் மருத்துவர்களின் தேவை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்