பூந்தமல்லி சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பாரிவாக்கம் சிக்னல் அருகே பூந்தமல்லி போலீசார் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த கண்டெய்னர் லாரியை மடக்கி சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டை, மூட்டையாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர். அப்போது பிடிபட்ட நபர் பெங்களூரைச் சேர்ந்த டிரைவர் விக்னேஷ் (28), என்பது தெரிய வந்தது.
இவர் பெங்களூரில் இருந்து குட்காவை கண்டெய்னர் லாரியில் ஏற்றி வந்து சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 10 டன் குட்கா, கண்டெய்னர் லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.