பாலமேடு ஜல்லிக்கட்டில் 46 பேர் காயம்.! 4வது முறையாக முதல் பரிசு வென்ற வீரர்..!!

Senthil Velan

செவ்வாய், 16 ஜனவரி 2024 (20:22 IST)
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் 14 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார்.
 
தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, தை மாதத்தின் முதல் நாளான நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்ற நிலையில், இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி  விறுவிறுப்பாக நடைபெற்றது. 
 
தகுதியுள்ள 1,000 காளைகளுக்கும், 700 வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு களமிறக்கப்பட்டனர்.   ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். 
 
முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் சீறி பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசு, வெள்ளி, கட்டில், மெத்தை, சைக்கிள், பீரோ, குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 10 சுற்றுகளாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 

 
டிஎஸ்பி உள்ளிட்ட 46 பேருக்கு காயம்:
 
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 46 பேர் காயமடைந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி விஜயராஜன், காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் மற்றும் இரு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் மாடுபிடிவீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 46 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த டிஎஸ்பி விஜயராஜன் உட்பட 10 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 
4-ஆவது முறையாக முதல் பரிசு பெற்ற பிரபாகரன்:
 
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் 14 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார். சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் 11 காளைகளை அடக்கி இரண்டாவது இடமும், கொந்தகை பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் 8  காளைகள் பிடித்து மூன்றாம் இடம் பிடித்தனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இவர், கடந்த 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை தட்டிச் சென்றார். தனது நண்பர்களால் தான் இந்த வெற்றி சாத்தியமானதாகவும், தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் பிரபாகரன் தெரிவித்தார்.



காளையின் உரிமையாளருக்கு கார் பரிசு:
 
இதேபோன்று முதலிடம் பிடித்த புதுக்கோட்டை இராயவயலை சேர்ந்த சின்னக்கருப்பு காளையின் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த தேனி கோட்டூரை சேர்ந்தர் அமர்நாத் என்பவரது காளைக்கு, பசுங்கன்றுடன் கூடிய நாட்டு பசு மாடு பரிசாக வழங்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்