விதி எண் 110-ஐ கையிலெடுத்த ஓபிஎஸ்: மாணவர்களை விடுதலை செய்ய உத்தரவு!

செவ்வாய், 31 ஜனவரி 2017 (12:17 IST)
விதி எண் 110 என்றவுடன் அனைவரது நினைவுக்கும் வருவது மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான். சட்டசபையில் விதி எண் 110-இன் கீழ் ஏறாழமான அறிவிப்புகளை வெளியிட்டவர் ஜெயலலிதா.


 
 
இந்நிலையில் தமிழக முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டசபையில் விதி எண் 110-இன் கீழ் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 36 மாணவர்கள் மீதான வழக்கை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.
 
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இளைஞர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் கடைசி நாளில் சென்னையில் வன்முறை வெடித்தது.
 
சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய பலரும் கோரிக்கை வைத்தனர்.
 
இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-இன் கீழ் அறிக்கை வாசித்த முதல்வர் பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட 36 மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்ப பெறப்படும் என அறிவித்துள்ளார்.
 
மேலும் இந்த வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் எனவும் வன்முறையின் போது தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்