வெள்ளை மாளிகையில் ஒரு கோமாளி தலைவராக இருக்கிறார்: ஒவைசி கடும் விமர்சனம்..!

Siva

வியாழன், 31 ஜூலை 2025 (15:19 IST)
இந்தியா மீது 25% வரி விதிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டிய நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசதுதீன் ஓவைசி, ட்ரம்பை "வெள்ளை மாளிகையில் ஒரு கோமாளி தலைவர்" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
 
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதற்காக இந்தியாவுக்கு 25% வரி விதிப்பேன் என்று ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து, இது இந்திய பொருளாதாரத்தின் மீது "வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல்" என்றும், நேரடி வெளிநாட்டு முதலீடுகள், ஏற்றுமதிகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்த நடந்த "சதி" என்றும் ஓவைசி தெரிவித்துள்ளார். நாளை  முதல் இந்த வரி இந்தியாவுக்கு அமலுக்கு வரும் என்று கூறப்படும் நிலையில், ஓவைசியின் இந்த விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
"வெள்ளை மாளிகையில் ஒரு கோமாளி தலைவர் இருக்கிறார் என்றும், என் நாட்டின் அரசாங்கம் மிரட்டப்படுவதை பார்த்து சும்மா இருக்க முடியாது" என்றும் ஓவைசி திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், "இந்தியா ஒரு சுதந்திரமான இறையாண்மை கொண்ட நாடு; மற்ற நாடுகளுக்கு சலாம் போடும் ஒரு நாடு அல்ல" என்றும் அவர் ஆணித்தரமாகக் கூறினார்.
 
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளை, "நமது இறையாண்மை மற்றும் பொருளாதார நிலைக்கு எதிரான திட்டமிட்ட, தெளிவான தாக்குதல்" என்று வர்ணித்த ஓவைசி, இதை இந்தியா நிச்சயம் சமாளிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், நமது அரசாங்கம் தேசிய நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்