நோயாளியை மருத்துவமனைக்கு உள்ளேயே தீர்த்துக் கட்டிய 2 பேர் கைது
புதன், 22 மார்ச் 2017 (16:30 IST)
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவரை வெட்டிக் கொலை செய்த இருவரை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் மாந்துறை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி தர்மன். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இசக்கியேல் என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இதனையடுத்து, நேற்று முன்தினம் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த தர்மன் திருச்சி லால்குடி அருகேயுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று மதியம் மருத்துவமனைக்குள் புகுந்த 2 மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தர்மனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார்.
இந்நிலையில், கொலையில் தொடர்புடைய இசக்கியேல் மகன் வினோத் மற்றும் மருது ஆகிய இரண்டு பேரை லால்குடி போலீசார் கைது செய்தனர்.
மேலும், தர்மரை கொலை செய்ய தூண்டியதாக இசக்கியேல், அவரது மனைவி லீமா ரோஸ் (50), வினோத்தின் மனைவி ஆரோக்கிய செல்வி (35) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.