அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பு.! காளைகள் முட்டியதில் 19 பேர் காயம்.!!

Senthil Velan

புதன், 17 ஜனவரி 2024 (10:40 IST)
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 19 பேர் காயம் அடைந்துள்ளனர்.
 
தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணி அளவில் உறுதிமொழி உடன் துவங்கியது. மாவட்ட ஆட்சியர் சங்கீதா உறுதிமொழி வாசிக்க வீரர்கள் தொடர்ந்து உறுதி எடுத்துக் கொண்டனர். 
 
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து துவங்கி வைத்தார். வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர். சுமார் 1000க்கும் மேற்பட்ட காளைகளும், 700க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளனர். 

ALSO READ: ஆண்கள் மட்டுமே வழிபாடு நடத்தும் கோவில்..! பெண்களுக்கு அனுமதியில்லாத திருவிழா..!!
 
வாடிவாசல் வழியாக சீறி பாய்ந்து வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கி வருகின்றனர். களத்தில் நின்று விளையாடும் காளைகள், மாடுபிடி வீரர்களை கதிகலங்க வைக்கின்றன. காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், சைக்கிள், பீரோ, கட்டில், மெத்தை, பித்தளை பாத்திரங்கள், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன
தற்போது நான்காவது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்ற ஒரு நிலையில், காளைகள் முட்டியதில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
 
அதிக காளைகளை பிடிக்கும் மாடு பிடி வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரும், ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கும் பரிசாக வழங்கப்படுகிறது. களத்தில் சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பாக ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரும் அதே போன்று பைக்கும் பரிசாக வழங்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்