18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - தீர்ப்பு எப்படி வந்தாலும் அதிமுகவிற்கு சிக்கல்

புதன், 13 ஜூன் 2018 (12:42 IST)
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான தீர்ப்பு எப்படி வந்தாலும் அது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
2017ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏக்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, அவர்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி முடிந்து இன்னும் தீர்ப்பு அறிவிக்கப்படாமல் இருக்கிறது.  கோடை விடுமுறைக்கு பின் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி மற்றும் நீதியரசர் இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தெரிவித்தது. தற்போது கோடை விடுமுறை முடிந்து உயர் நீதிமன்றம் செயல்பட துவங்கியுள்ளது. எனவே, ஓரிரு நாளில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 

 
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாக வாய்ப்பிருப்பதாக இன்று செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை திமுக, தினகரன் தரப்பு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆகியோர் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.  
 
இந்த வழக்கின் தீர்ப்புக்கு பின் அதிமுக அரசு கவிழ்ந்து விடும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தொடர்ந்து கூறி வருவதற்கு காரணம் இருக்கிறது.
 
தீர்ப்பு எப்படி வெளியானலும் அதிமுகவிற்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. தகுதி நீக்கம் செல்லும் எனக்கூறிவிட்டால், அந்த 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் அதிமுகவிற்கு எதிராகவே வாக்களிப்பார்கள். அந்த தொகுதிகளில் தினகரன் அணி வேட்பாளரோ அல்லது திமுக வேட்பாளரோ, யார் வெற்றி பெற்றாலும் அதிமுகவிற்கு ஆட்சியை பறிகொடுக்கும் நிலை ஏற்படும்.

 
ஒருவேளை தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வெளியானால், தினகரனுடன் சேர்ந்து தனி அணியாக சட்டசபையில் எடப்பாடி அரசுக்கு எதிராக அவர்கள் செயல்படுவார்கள். மேலும், திமுகவுடன் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்கவும் அவர்கள் முயற்சி செய்வார்கள். அதற்கான முயற்சியை திமுக தரப்பு நிச்சயம் எடுக்கும் எனத் தெரிகிறது.
 
ஏற்கனவே இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி வெளியானால் என்ன செய்வது என சபாநாயகர் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் தீவிர ஆலோசனை நடத்தினார் எனவும், தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் உளவுத்துறை மூலம் கண்காணித்து வருகிறார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
ஒருபக்கம், 18 எம்.எல்.ஏக்களில் சிலரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியிலும் எடப்பாடி தரப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பில் அதிமுகவின் அரசியல் எதிர்காலம் அடங்கியிருப்பதால் அதிமுக தரப்பில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

8 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு?

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்