சூதுகவ்வும் பாணியில் கடத்தல் நாடகம்… சிறுவனின் செயலால் போலீஸார் அதிர்ச்சி!

வெள்ளி, 9 அக்டோபர் 2020 (10:11 IST)
சென்னையில் பள்ளி படிக்கும் சிறுவன் தந்தையிடம் இருந்து 10 லட்சம் பணம் பறிப்பதற்காக தன்னை யாரோ கடத்தி விட்டதாக நாடகம் ஆடியுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் டொளா ராம். இவர் இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு 14 வயதில் பள்ளி படிக்கும் மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் நேற்று டியுஷன் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பின்னர் இரவு 8 மணிபோல அவரின் செல்போன் எண்ணில் இருந்து தந்தைக்கு போன் வந்துள்ளது. அப்போது அவரே பேசியுள்ளார்.

தன் தந்தையிடம் தன்னை யாரோ கடத்தி விட்டதாகவும் 10 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் கூறிய அவர் உடனடியாக பணத்தை எடுத்துக்கொண்டு வரும்படியும் தந்தையிடம் கூறியுள்ளார். அதைக் கேட்ட தந்தை போலிஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர்கள் செல்போன் சிக்னலை டிராக் செய்து சிறுவன் சேப்பாக்கம் அருகே இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் அந்த பகுதியில் தேடிய போது அங்கு சிறுவன் தனியாக நின்றுள்ளான். அதன் பின்னர் அவனை போலிஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரித்த போது தந்தையிடம் இருந்து பணம் பறிப்பதற்காகதான் இது போல நாடகம் ஆடியதாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளான். இதைக் கேட்டு அதிர்ச்சியான போலிஸார் மாணவனை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்