சுவையான சிலோன் பரோட்டா செய்ய…!!

தேவையான பொருட்கள்:
 
ஸ்டப்பிங் செய்ய:
 
நெய் - 2 மேசைக்கரண்டி
எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - 2
பூண்டு - 3 பல்
இஞ்சி - 2 அங்குல துண்டு
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சிலோன் கறி பவுடர் - 4 மேசைக்கரண்டி
லெமன் ஜெஸ்ட் - 2 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - 2
தேங்காய் பால் - 2 கப்
எலுமிச்சை சாறு - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
 
சிலோன் மசாலா தயார் செய்ய:
 
தனியா விதை - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 2 மேசைக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
அரிசி - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
 
பரோட்டா செய்ய:
 
மைதா மாவு - 2 கப்
முட்டை - 2
சர்க்கரை - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
முதலில் பரோட்டா செய்ய தேவையான பொருட்களை ஒன்றாக ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு சிறிது சிறிதாக பாலும், தேவையெனில் தண்ணீரும் தெளித்து பிசைய வேண்டும். நன்றாக பிசைந்தவுடன் ஈரத்துணியால் சுற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
 
சிலோன் கறி பவுடர் செய்ய தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். எண்ணெய் இல்லாமல் ஒவ்வொன்றாக தனித்தனியே வறுத்தெடுத்து, ஆறவைத்து கொரகொரப்பாக பொடியாக செய்யவும்.
 
சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். நெய் காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் சிக்கனை போட்டு வதக்கவும். சிக்கன் சில நிமிடங்களில் கலர் மாறி அதிலிருந்து நீர் வெளியேற ஆரம்பித்தவுடன் சிக்கனை மட்டும் தனியே எடுத்து விடவேண்டும். அதே நெய்யில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
 
வெங்காயம் சிறிது வதங்கியவுடன் உப்பு, பிரிஞ்சி இலை மற்றும் மற்ற பொடி வகைகளை சேர்த்து வதக்கவும். பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். இப்பொழுது பொரித்து வைத்துள்ள சிக்கனை பத்து நிமிடம் வேக விடவும். பிறகு தேங்காய் பால் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து  கலந்துவிடவும். 
 
பரோட்டா மாவை சதுரமாக திரட்டி நடுவில் சிக்கனை வைத்து மூடவும். தவாவில் பரோட்டாவை போட்டு எண்ணெய் தேய்த்து இரு புறமும் திருப்பி போட்டு வெந்தவுடன் எடுக்கவும். இந்த பரோட்டாவின் ஸ்பெஷலே சதுர வடிவம் தான். சால்னா, ரைத்தாவுடன் சாப்பிட சுவை அருமையாக இருக்கும். சுவையான சிலோன்  பரோட்டா தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்