விஜயதசமி என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாளும் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும், பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம் தேடி, பத்தாம் நாளான தசமி அன்று ஸ்ரீ அன்னை விஜயம் செய்யும் நாளே ’விஜயதசமி’என்றும் கூறப்படுகிறது. அன்று ஸ்ரீ அன்னையே நம் இல்லம் தேடி வருகிறாள் என்பதே இந்நாளின் மிகப் பெரிய சிறப்பு.
நவராத்திரிப் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் மகாநவமி என்று தொழில்களையும், கல்வியையும், கலைகளையும் போற்றும் விதமாகவும், அதற்கடுத்த நாள் விஜயதசமி என்று வெற்றித் திருநாளாகவும் உலகெங்கும் உள்ள இந்துக்கள் மிகத் தொன்மைக் காலம் தொட்டுக் கொண்டாடி வருகின்றார்கள்.
இத்திருநாளில் ஏடு தொடக்குதல், புதிய வியாபார நிலையம் ஆரம்பித்தல், புதிய தொழில் ஸ்தபனங்கள் ஆரம்பித்தல் போன்றன ஆரபிப்பதால் வெற்றியும் புகழும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மகிஷாசுரன், சண்ட முண்டர்கள், சும்ப நிசும்பர்கள் ஆகிய கொடிய அரக்கர்களை அன்னை பராசக்தி அழித்து வெற்றி கொண்ட திருநாள். தீமையின் உருவான ராவணனை ஸ்ரீராமன் போரில் வென்ற திருநாள். பாண்டவர்கள் தர்மத்தின் வெற்றிக்காக தங்கள் ஆயுதங்களையும், அன்னை துர்க்கையும் வழிபட்ட நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
நம் தேசத்தில் தர்மத்தின் வெற்றிக்காகப் போரிட்டு, நல்லாட்சி புரிந்த சேரசோழ பாண்டியர், குப்தர்கள், ராஜபுத்திரர்கள், விஜயநகர மன்னர்கள், வீரசிவாஜி, குருகோவிந்த சிம்மன் முதலிய அனைத்து வீரர்களும், மன்னர்களும் தங்கள் ராஜ்ஜிய மக்களுடன் இணைந்து கொண்டாடிய வெற்றித் திருநாள். நம் தேசத்தின் முப்படைகளும், அரசு நிறுவனங்களும், தொழில் மையங்களும், வணிகத் தலங்களூம், கல்விக் கூடங்களும், கலைஞர்களும்; சக்தியும், ஊக்கமும், வெற்றியும் வேண்டி ஒவ்வோர் ஆண்டும் உற்சாகத்துடன் கொண்டாடும் திருநாள்.