நவராத்திரி இறுதி மூன்று நாட்களும் சரஸ்வதியின் ஆட்சிக்காலம்

கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்கும். மனவலிமையை வளர்க்கச் செய்யும். விரிந்த அறிவைத் தரும். தன்னுடைய சுய வலிமையைக் கொண்டு நிற்கச் செய்யும். அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை. அதை அடைய வேண்டுமென்றால் நவராத்திரியில் கடைசி மூன்று நாட்கள் கலைவாணியை மனமாரத் துதிக்க வேண்டும்.

 
நவராத்திரியில் சரஸ்வதி தேவியும் மற்ற இரு தேவிகளும் அவரவர் கணவன்மார்களைப் பூஜித்து முழு வலிமையையும் பெற்று அருள்பாலிக்கிறார்கள். அந்த வகையிலே சரஸ்வதிதேவி தன் கணவரான நான்முகனிடம் பூரண அருளை வேண்டிப்  பிரார்த்திப்பதால் பிரம்மாவின் நாக்கில் சரஸ்வதி அமருகிறாள். ஆகவே சரஸ்வதி பூஜை செய்கிறவர்களுக்கு சரஸ்வதியின்  அருட்கடாட்சம் நிறைவாகக் கிடைக்கும்.
 
நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை  வாழ்விக்க விரும்புகின்றான். அதனால், மகேஸ்வரி, கௌமாரீ, வராஹி என துர்கா தேவியாகவும்; அடுத்த மூன்று நாட்களும்  கிரியா சக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன  போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான். அதனால், மஹாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என லட்சுமி தேவியாகவும்; இறுதி மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இந்த மூன்று தினங்களிலும்  சரஸ்வதி, நரசிம்மீ, சாமுண்டி என சரஸ்வதி தேவியாகவும் சித்தரித்து வணங்குகிறோம்.
 
இந்த நாட்களில் நோன்பிருந்து, நைவேத்யங்களைப் படைத்து கலைக்கு ஆதாரமாகத் திகழும் கலைமகளை பாடி, ஆடி பரவசமுடன் வணங்குவோருக்கு கேட்ட வரத்தை சக்தியானவள் கைமேல் நல்குவாள் என்பது ஐதீகம்.
 
தேவியானவள் அனைத்து உருவத்திலும் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறாள் என்பதைக் குறிக்கும் விதமாகவே அனைத்து உருவ பொம்மைகளையும் கொலுவாக வைத்து வணங்கும் கலாச்சாரம் காணப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்