இந்த 9 நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரை ஒன்பது அவதாரங்களாக அலங்கரித்து, போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும். மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில் இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்புகின்றான் அப்போது இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. பின் அதை எவ்வாறு என்று அறிகின்றான். அப்போது ஞானசக்தி தோன்றுகின்றது. பின் கிரியா சக்தியினால் உலகைப் படைக்கின்றான். இக்கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது.
(இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்).
புரட்டாசி அமாவாசை அன்றிருந்தே சிற்றின்ப வாழ்கையைத் தவிர்த்து, உணவை அளவோடு நிறுத்தி, விரதம் பூண்டு தேவி மீது பக்தி சிரத்தையுடன் நவராத்திரி வழிபாட்டைத் துவங்க வேண்டும். விரதம் கைக்கொள்ளுவோர் (அனுஷ்டிப்போர்) அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.