நவராத்திரி நாட்களில் ஐஸ்வர்யம் உண்டாக திருமகள் பூஜை
நவராத்திரி பண்டிகை நாளில் 9 நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்குவார்கள். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாளாகும்.
ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள் புத்தகங்கள், பென்சில், பேனா போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள்.
இந்த நாளே ஆயுத பூஜை மஹாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. 10 நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் தங்கள் தொழில் சம்பந்தமான ஒரு புதிய புத்தகம் வாங்கி பூஜை செய்வது சிறப்பு இதனால் சரஸ்வதி கடாட்சம் என்றென்றும் நிலைத்து நிற்கும். விஜயதசமி பூஜை ஆயுத பூஜைக்கு மறுநாள் விஜயதசமி அன்று மறுபூஜை செய்து தொழில் தொடங்கினால் அந்த வருடம் முழுவதும் தொழில் நிலை சிறப்படைந்து நன்றாக செல்வச் செழிப்பு உண்டாகும்.
நவராத்திரியின் ஒன்பது நாள் பூஜையையும் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள். சரஸ்வதி பூஜை அன்று கடலை, சுண்டல் மற்றும் பழங்கள் கொடுக்கலாம். நவதானியச் சுண்டல் நிவேதனம், நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.
அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே, நவராத்திரி நாட்களில் தினமும் பக்திப் பாடலகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாட வேண்டும். நவராத்திரி ஒன்பது நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால், முக்திப் பேறு உண்டாகும். நவராத்திரி நாட்களும், வாசலில் தினம் தினம் புதிய புதிய மாவிலைத் தோரணங்கள் கட்டி பூஜை செய்தால், ஐஸ்வர்யம் உண்டாகும்.