பத்து நாட்கள் வீட்டில் கொண்டாடப்படும் ஒரே விழாவாக நவராத்திரி இருப்பதால், வீட்டை அழகுபட அலங்கரிக்க வேண்டும். பலவித பொம்மைகளால் கொலு அமைத்து, விரதம் இருந்து, வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்கள் மற்றும் கன்னி பெண்களுக்கு தகுந்த உபசரிப்பு செய்து, அவர்களை மகிழ்விக்கிறோம். இதனால், முப்பெருந்தேவியரும் நம் இல்லத்தில் வாசம் செய்வார்கள் என்றும், அவர்களின் பரிபூரண ஆசி மற்றும் அனைத்து செளபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நவராத்திரி முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாள் நவராத்திரியை வட மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்.