மரவள்ளிக்கிழங்கில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் என்ன...?
மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது. இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும்.
இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை கரைக்கிறது.
மரவள்ளிக்கிழங்கில் உள்ள இரும்பு, தாமிரம் ரத்த சோகையை கட்டுப்படுத்தும். அதிக நார்சத்து இருப்பதால் எளிதில் சீரணமாக உதவும். இதில் இடம்பெற்றுள்ள புரத சத்தும், வைட்டமின் கேவும், எலும்பு மற்றும் திசுக்கள் ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைத்துக்கொடுக்கிறது.
இதிலிருந்து தயாரிக்கப்படும் முக்கிய மாவுப் பொருள் ஜவ்வரிசி. இது கஞ்சி, பாயசம் செய்ய உதவும். இக்கஞ்சி வயிற்று புண் ஆறுவதற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இக்கிழங்கிலிருந்து சிப்ஸ், முறுக்குகள் செய்து கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர போன்ற பகுதிகளில் விற்கப்படுகிறது.
மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் எனப்படும் மாவுப் பொருள் பல்வேறு துறைகளில், குறிப்பாக பருத்தி மற்றும் சணல் ஆடைகள் உற்பத்தி, காகிதம், நாட்காட்டி தயாரிப்பு, கோந்து மற்றும் கெட்டியான அட்டைகள் தயாரிக்கும் தொழிலில் முக்கியமான மூலப்பொருளாக பயன்படுகிறது.
மரவள்ளிக்கிழங்கு மாவில் தோசை, அடை, உப்புமா போன்ற எல்லாவகை சிற்றுண்டிகளும், இனிப்பு கார வகைகளும் செய்யலாம். மரவள்ளிக்கிழங்கை சமையலில், சாம்பாரில் சேர்க்கலாம்,
ஜவுளி தொழிலில் துணிகளுக்கு கஞ்சி போட்டு மொடமொடப்பான தன்மை ஏற்படுத்த பயன்படுகிறது. அதிக அளவில் மாவுச்சத்து மிக்க மரவள்ளிக்கிழங்கு, உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு, உடலுக்கு ஆற்றலைத் தரும்.
மரவள்ளிக்கிழங்கு சாப்பிடும்போதோ அல்லது சாப்பிட்டபின்போ அன்றைய நாளில் இஞ்சி அல்லது சுக்கு சாப்பிடக்கூடாது. மரவள்ளிக்கிழங்கின் தன்மையால், அவை உடலுக்கு விஷமாக மாறிவிடும்.