செருப்படை முழுத் தாவரமும் கார்ப்புச் சுவையையும், வெப்பத் தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். மலம், சிறுநீர் ஆகியவற்றை பெருக்கும். சளியை முற்றிலும் குணப்படுத்தும்.
தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி. சொர சொரப்பான தாவரம். இலைகள் நீள் வட்டம் அல்லது முட்டை வடிவமானவை. மெழுகு பூசினாற் போன்றவை. மலர்கள் சிறியவை. இதற்கு பெரியசெருப்படை, பெருஞ்செருப்படை போன்ற பெயர்களும் உண்டு. முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படும்.
வெள்ளைப்படுதல், சிறு நீர் எரிச்சல் ஆகியவை குணமாக செருப்படை முழுத் தாவரத்தையும் சேகரித்து நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு 20கிராம் அளவு நசுக்கி 4 டம்ளர் நீரில் இட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனை வேளைக்கு 30 மிலி அளவாக தேவையான அளவில் பனை வெல்லம் சேர்த்து தினமும் இரண்டு வேளைகள் குடித்து வரவேண்டும்.
நாவறட்சி, விக்கல் ஆகியவை தீர செருப்படை, மிளகு, திப்பிலி ஆகியவற்றை தனித்தனியாக சுட்டு அவற்றின் சாம்பலைச் சம அளவாக கால் தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நாக்கில் தடவ வேண்டும்.