கூல் ட்ரிங்க்ஸ விடுங்க.. இத குடிங்க! – கோடை வெயிலுக்கு சத்தான சில ஜூஸ்கள்!

திங்கள், 17 ஏப்ரல் 2023 (14:53 IST)
ஆண்டுதோறும் கோடை கால வெயில் பல்வேறு சுற்றுசூழல் காரணமாக அதிகரித்து வருகிறது. கோடை கால வெயில் உடல் சூடு, நீர்க்கடுப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சினைகளையும் ஏற்படுத்திவிடுகிறது.

வெயிலை சமாளிக்க பலரும் குளிர்பானங்களை அருந்துகின்றனர். ஆனால் கார்பனேற்ற குளிர்பானங்கள் அந்த சமயம் தாகத்தை போக்கினாலும், உடலுக்கு தேவையான ஆரோக்கிய சத்துக்களை தருவதில்லை. இயற்கையான பழச்சாறுகள் உடலுக்கு நன்மை அளிப்பதுடன் கோடைக்கால தோல் பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கின்றன.

இளநீர்

கோடைகாலத்தில் இளநீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதிக நீர்ச்சத்து கொண்டுள்ள இளநீட் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை தருவதுடன், அதில் உள்ள அமிலத்தன்மை செரிமானத்திற்கும் உதவுகிறது.

நுங்கு

கோடை சீசனில் மிகவும் பிரபலமான உணவு நுங்கு. நுங்கு நீர்த்தன்மை கொண்ட ஜெல்லி போன்ற பழம். இதை சாப்பிடுவதால் உடல் வெப்பம் குறைவதுடன், உடல் புத்துணர்ச்சியும் பெறுகிறது. நுங்கை அரைத்து ஜூஸாகவும் சாப்பிடலாம்.

நீர் மோர்

காலம்காலமாக கோடை வெயிலில் இருந்து மக்களை காக்கும் சத்தான பானம் நீர் மோர். ‘தயிரில் தண்ணீர் சேர்க்காதவரை நல்லது.. மோரில் எவ்வளவு தண்ணீர் சேர்க்கிறோமோ அவ்வளவு நல்லது’ என சொல்வார்கள். மோரில் கறிவேப்பிலை, கொத்தமல்லி நறுக்கி போட்டு குடிக்கும்போது உடலுக்கு இதமாகவும், உடலில் நீர் கோர்த்து கொள்ளும் பிரச்சினையை தீர்ப்பதாகவும் உள்ளது.

தர்பூசணி

கோடை சீசனின் அதிகம் பிரபலமான பழம் தர்பூசணி. தர்பூசணியை தண்ணீர்பழம் என்றும் அழைப்பர். அந்த அளவிற்கு அதிகமான நீர்ச்சத்தை கொண்டுள்ள ஒரு பழம் தர்பூசணி. வெயிலில் அலைபவர்கள் ஒரு துண்டு தர்பூசணி சாப்பிட்டால் உடல் வெப்பம் குறைவதுடன், நீர்க்கடுப்பு போன்ற பிரச்சினைகளையும் குணமாக்குகிறது.

எலுமிச்சை சாறு

தண்ணீர் தாகத்தை போக்கவும், உடலுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தவும் குறைந்த விலையில் கிடைக்கும் ஒரு பொருள் எலுமிச்சை. எலுமிச்சையை பிழிந்து தண்ணீருடன் சிறிது உப்ப அல்லது சர்க்கரை சேர்த்து குடித்தால் தாகம் உடனடியாக நிற்பதுடன், எலுமிச்சையின் அமிலத்தன்மை உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை உடனடியாக அளிக்கிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்