வருடத்தில் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய 6 மாதம் மட்டுமே பதனீர் கிடைக்கும். இதில் தை, மாசி பதனீர் உற்பத்தி தொடங்கும் மாதங்கள். பங்குனி, சித்திரை உற்பத்தி உச்சத்திலிருக்கும். வைகாசி, ஆனி உற்பத்தி முடியும் மாதங்கள். ஆனால், கருப்பட்டி, பனங்கற்கண்டு, சில்லுக் கருப்பட்டிகளின் தேவை வருடம் முழுவதும் உள்ளது. எனவே கருப்பட்டி தொழிலில் போலிகள் அதிகம் உருவாகிவிட்டது.
கருப்பட்டியை அல்லது கருப்பட்டித் துண்டைக் கடித்து மெல்லும் போது, அதன் சுவை கரிப்புத் தன்மையுடன் கூடிய இனிப்புச் சுவையாக இருந்தால், அதுதான் ஒரிஜினல் கருப்பட்டி.
முழுக் கருப்பட்டியை உடைத்துப் பார்த்தால் கறுப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும். ஆனால், போலி கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கும். கடைகளில் வாங்கி வீட்டில் வைத்திருக்கும் கருப்பட்டி சில நாட்களில், சில வாரங்களில் அதனுடைய கெட்டித் தன்மையில் இருந்து இளக ஆரம்பித்தால் அது போலி. கல்லு போன்று அதன் தன்மை மாறாமல் இருந்தால், அது தான் உண்மையானது.
ஒரு டம்ளர் தண்ணீரில் சின்னக் கருப்பட்டி துண்டைப் போட்டால், அது முழுவதுமாக கரைய ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாகும். ஆனால் போலி கருப்பட்டி, அரை மணி நேரத்திலேயே கரைந்துவிடும்.
தேங்காயைத் தட்டிப் பார்ப்பது போல, கருப்பட்டியின் அடிப்பாகத்தை தரையில் தட்டிப் பார்க்கவும். சத்தம் மிதமாகக் கேட்டால் அது ஒரிஜினல். சத்தம் அதிகமாகக் கேட்டால் அது போலி. கருப்பட்டியை கையில் எடுத்து உற்றுப்பார்த்தால் பளபளப்பில்லாமல் இருந்தால் அது ஒரிஜினல். அதுவே, கருப்பட்டியின் மேல் மைதா மாவு போல, தொட்டால் கையில் வெள்ளையாக ஒட்டினால் அது போலியானது என கண்டுபிடிக்கலாம்.