காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத்தை குண்டு வீசி கொலை செய்ய பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திட்டமிட்டது உளவுத்துறைக்கு தெரியவந்தது. நாசவேலைக்கு முயன்ற தீவிரவாதிகள், குலாம் நபி ஆசாத்தின் வீடு, அலுவலகங்களில் உள்ளவர்களின் துணையுடன் தகவல்களைப் பெற்றதும் உளவுத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து குலாம் நபி ஆசாத்தின் பாதுகாப்பு அதிகாரிகள், வீடு மற்றும் அலுவலக ஊழியர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். வீட்டில் இருந்த தோட்ட வேலைக்காரர், தொலைபேசி இயக்குநர், உதவியாளர்கள் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டனர்.
இதற்கிடையில் காஷ்மீரில் நேற்று 2 மர்ம மனிதர்கள் காவலர்களிடம் சிக்கினர். பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த அவர்கள் குலாம் நபி ஆசாத்தை கொல்லும் திட்டத்துடன் ஊடுருவியதாகக் கூறப்படுகிறது.
இவர்களைப் போல மேலும் சில குழுக்கள் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், குலாம் நபி ஆசாத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை காவலில் ஈடுபட்ட மாநிலக் காவல் துறையினர் விலக்கிக் கொள்ளப்பட்டதுடன், அவர்களுக்குப் பதிலாகக் கறுப்பு பூனை படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.