காதலை ஏற்க மறுத்த மாணவி; பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞன்! – ஜார்கண்டில் அதிர்ச்சி சம்பவம்!

திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (08:52 IST)
ஜார்கண்டில் தனது காதலை ஏற்க மறுத்த +2 மாணவியை இளைஞன் ஒருவன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தை சேர்ந்த பெண் அங்கிதா குமாரி. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் +2 படித்து வந்துள்ளார். அங்கிதா குமாரியை அப்பகுதியை சேர்ந்த ஷாரூக் என்ற மாணவர் நீண்ட காலமாக ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது காதலை ஷாரூக் அங்கிதாவிடம் சொன்னபோது அவர் காதலிக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷாரூக் சம்பவத்தன்று அங்கிதா மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தியுள்ளார்.

இதனால் உடல் முழுவதும் தீக்காயமடைந்த அங்கிதா மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அங்கிதாவின் மரணம் தொடர்பாக அப்பகுதியில் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ஜார்கண்ட் போலீஸ் ஷாரூக்கை கைது செய்துள்ளனர். அப்பகுதியில் எழுந்த போராட்டங்கள் காரணமாக அந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்