மும்பையில் ரயில்வே அப்ரெண்டிஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் தங்களுக்கான பணியை வழங்குமாறு, மதுங்கா மற்றும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்துக்கு இடையேயான ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தால் புறநகர், எக்ஸ்பிரஸ், சிறப்பு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. அலுவலகங்களுக்கு செல்லும் பயணிகள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். இதனால் போலீசார் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இளைஞர்களை தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்யபடாததால் இதுவரை 10 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், ரயில்வே அமைச்சர் வரும் வரை இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் எனவும் போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.