நாடு முழுவதும் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் அதிநவீனமான இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் பல வழித்தடங்களில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியாவின் முக்கிய நகரங்களின் வழித்தடங்களில் பயணிக்கும் இந்த வந்தே பாரத் ரயிலில் ஏசியில்லா அமரும் இருக்கை, ஏசியுடன் கூடிய அமரும் இருக்கை வசதிகள் உள்ளது. சாதாரண ரயில்களை ஒப்பிடும்போது வந்தே பாரத் ரயிலின் டிக்கெட் விலை சற்றே அதிகம் என்பதால் சில பகுதிகளில் சீசன் சமயங்களை தவிர அதிக அளவில் பயணிகள் வந்தே பாரத்தில் பயணிப்பதில்லை என்ற சூழலும் உள்ளது.
லக்னோவில் இருந்து டெராடூன் செல்லும் வந்தே பாரத் ரயிலில் பலர் டிக்கெட் புக்கிங் செய்திருந்த நிலையில், வித் அவுட்டில் பயணிக்கும் கும்பல் வந்தே பாரத் ரயிலுக்குள் புகுந்ததுடன் முன்பதிவு செய்தவர்களின் இருக்கைகளிலும் அமர்ந்து கொண்டுள்ளனர். கூட்ட நெரிசலில் சீட் கிடைக்காமல் புக் செய்தும் நின்று கொண்டு செல்லும் நிலைக்கு பயணிகள் பலரும் ஆளாகியுள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் புகார் தெரிவித்து வரும் நிலையில் அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய ரயில் வசதிகள் இல்லாததே இந்த நெருக்கடிக்கு காரணம் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் பலரும் டிக்கெட்டே எடுக்காமல் பயணம் செய்வதும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.