மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் கல்யான் டவுன்ஷிப் என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஷங்கர் கைக்வாட்(44). இவரை கடந்த மே மாதம் 18ம் தேதியிலிருந்து காணவில்லை என இவரின் மனைவி ஆஷா போலீசாரிடம் புகார் அளித்தார். ஆனால், இந்த விவகாரத்தில் ஆஷாவிற்கு தொடர்பிருக்கலாம் என ஷங்கரின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
ஷங்கர் ஏராளமான சொத்துகளை ஆஷாவின் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். ஆனால், ஆஷா பலமுறை வற்புறுத்தியும் தந்தையின் மூலம் தனக்கு கிடைத்த ரூ.15 கோடி மதிப்புடைய சொத்தை எழுதிவைக்க மறுத்துவிட்டார். எனவே, அந்த சொத்தை பெற கணவரை கொல்வது என்ற முடிவிற்கு ஆஷா வந்துள்ளார்.
எனவே, ஒரு கூலிப்படையை அணுகி ரூ.30 லட்சம் தருவதாக கூறி, ரூ.4 லட்சத்தை முன்பணமாக கொடுத்துள்ளார். அதையடுத்து, கடந்த மே மாதம் 18ம் தேதி ஷங்கரை ஆட்டோவில் அழைத்து சென்ற ஆஷா அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துள்ளார். ஷங்கர் மயங்க தொடங்கியவுடன் கூலிப்படையை சேர்ந்த 4 பேரும் அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து, அவரின் உடலை ஒதுக்குப்புறமான பகுதியில் தூக்கி வீசியுள்ளனர். அதன் பிறகு ஒன்று தெரியாதவர் போல் தனது கணவரை காணவில்லை என போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.