ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டினம் என்ற பகுதியைச் சேர்ந்த அமரேந்திர பாபு என்பவர் அடிக்கடி தினமும் மது குடித்துவிட்டு வந்து, மனைவியை அடித்து துன்புறுத்தினார். அதேபோல், நேற்று முன் தினம் மதுபோதையில் வீட்டிற்கு வந்து, மனைவி அருணாவிடம் தகராறு செய்தார். மேலும், தனது பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்து, அருணாவை கொலை செய்வேன் என மிரட்டினார்.
இதனால், பொறுமை இழந்த அருணா, ஒரு கட்டையை எடுத்து கணவரின் தலையில் ஓங்கி அடித்தார். அதன் பிறகு, ஒரு கயிறு எடுத்து கணவரின் கழுத்தில் கட்டினார். பின்னர், கணவரை வெளியே இழுத்துச் சென்றார். கழுத்தில் கயிறு கட்டியதால் ஏற்பட்ட வலியால், அமரேந்திர பாபு துடித்தார்.
இந்த சூழ்நிலையை பார்த்த அப்பகுதியினர் அருணாவை சமாதானப்படுத்த முயன்றனர். சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். அதற்குள், அமரேந்திர பாபு மரணம் அடைந்ததை போலீசார் உறுதி செய்தனர்.
தற்போது, அருணா தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.