கெஜ்ரிவாலுக்கு ஏன் ஜாமின் வழங்கக்கூடாது.? ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

Senthil Velan

வெள்ளி, 3 மே 2024 (21:06 IST)
தேர்தல் நேரம் என்பதால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கலாமே என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை அதை ஏற்க மறுப்பதற்கான விரிவான விளக்கத்தை 7 ஆம் தேதி தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது.
 
டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.   யூகங்கள் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தனக்கு எதிராக நேரடி சாட்சியங்கள் இல்லை என்றும் கெஜ்ரிவால் தரப்பில் வாதிடப்பட்டது. 
 
இந்த வழக்கில் சாட்சிகள் தனக்கு எதிராக முதலில் எதுவும் சொல்லவில்லை என்றும் ஆனால் திடீரென அவர்கள் மாற்றி கூறுவதாகவும் கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த அமலாக்கத்துறை, கெஜ்ரிவாலுக்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் உள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றம் ஜாமின் தர மறுத்ததாகவும் தெரிவித்தது.
 
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை நீண்டு கொண்டே போவதால், தற்போதைய நிலையில் கட்டுப்பாடுகளுடன் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கலாமே என தெரிவித்தனர். தேர்தல் சமயம் என்பதால் இடைக்கால ஜாமின் குறித்து பரிசீலிக்கிறோம் என்றும் குறிப்பிட்டனர்.

ALSO READ: ராகுல் காந்திக்கு எதிராக களமிறங்கிய பாஜக வேட்பாளர்.! யார் தெரியுமா.?
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, இடைக்கால நிவாரணம் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என தெரிவித்தது. இதையடுத்து, கெஜ்ரிவாலுக்கு ஏன் ஜாமின் வழங்கக்கூடாது என்பது தொடர்பான விரிவான வாதத்தை வரும் வரும் 7 ஆம் தேதி தெரிவிக்க அமலாக்கதுறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்