ஹலோ! என் அக்கவுண்ட்ல எப்ப சார் ரூ.15 லட்சம் போடுவீங்க : பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம்
வியாழன், 1 செப்டம்பர் 2016 (15:01 IST)
கடந்த பாராளுமன்ற தேர்தலில், கருப்பு பணத்தை மீட்டு, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழையின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் பணம் செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி கொடுத்தது என்னவாயிற்று என்று சமூக ஆர்வலர் ஒருவர் மத்திய அரசுக்கு தகவல் அறியும் உரிமையின் கீழ் மனு அனுப்பியுள்ளார்.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலின் போது, பாஜக சார்பில் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதையடுத்து பிரச்சார மேடைகளில் பேசிய மோடி, பாஜக ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணம் அனைத்தும் மீட்கப்பட்டு இந்தியாவில் உள்ள ஏழைகள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
தேர்தலில் பாஜக ஆட்சி அமைத்தது. மோடி பிரதமரானார். ஆனால் கருப்புப் பணத்தை இதுவரை மீட்கவில்லை.
இந்நிலையில்,ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜால்வார் எனும் பகுதியில் வசிக்கும் லால் என்பவர் தகவல் அறியும் உரிமையின் கீழ், பிரதமர் அலுவலகத்திற்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தேர்தலின் போது கூறப்பட்ட வாக்குறுதி என்னவாயிற்று.. கருப்புப் பணத்தை மீட்க என்ன முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரங்களை தர வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
அவரின் மனுவை பிரதமர் அலுவலகம் மத்திய தகவல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இன்னும் 15 நாட்களில் அதற்கான பதில் அனுப்பப்படும் என சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
லால் கூறுகையில் “தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி, நாட்டில் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் 90 சதவீதம் ஊழல் அதிகரித்துள்ளது. எனவே ஊழலை ஒழிப்பதற்கான சட்டத்தை எப்போது நிறைவேற்றப்படும் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.