வங்கதேச நாட்டிற்கு மின்சாரம் வழங்கி வரும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான அதானி நிறுவனம், நவம்பர் 7ஆம் தேதிக்குள் மின்சாரத்திற்கான பாக்கி தொகையை வழங்காவிட்டால் மின்சாரத்தை துண்டித்து விடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச நாட்டிற்கு மின்சாரம் வழங்கி வரும் அதானி நிறுவனத்திற்கு, அந்நாட்டு அரசு 7200 கோடி ரூபாய் நிலுவையில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலுவைத் தொகையை நவம்பர் 7ஆம் தேதி வரை கொடுக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.
அதானி நிறுவனம், தனது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மின்சார நிலையத்தில் இருந்து வங்கதேசத்துக்கு அனுப்பி வரும் மின்சாரத்தின் அளவை பாதியாக குறைத்துள்ளதாகவும், முழுமையான நிலுவை தொகையை செலுத்திய பிறகு முழுமையான மின்சாரம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சூழலில், வங்கதேசத்தின் இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ், இதுகுறித்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதானி நிறுவனத்திடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.