இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் கடந்த 3ஆம் தேதி அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென மாயமாய் மறைந்தது. விமானம் மாயமாகி ஒரு வாரம் ஆகியும் இந்த விமானம் குறித்து எந்தவித தகவலும் கிடைக்காததால் இந்திய விமானப்படை அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த விமானத்தில் 13 பேர் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாயமான விமானத்தை கண்டுபிடிக்க இரவு பகல் பாராமல் தேடுதல் வேட்டையில் இறங்கியது இந்திய ராணுவம். உள்ளூர் பழங்குடியினர், சுற்றுலா வழிகாட்டிகள், பொது மக்களும் விமானத்தை தேடுவதற்கு உதவினார்கள். எட்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் இன்று விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சியாங் மாவட்டம் கட்டி என்ற ஊரின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் சிதந்த நிலையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் பயணித்த 13 பேர் என்னவானார்கள் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரியவில்லை. இப்படியான ஒரு கோர விபத்தில் அவர்கள் அனைவரும் இறந்திருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுகிறது.