உத்தர பிரதேசம் மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரத்தின் தெரு ஒன்றில் அமைச்சர் கோபால் நந்தி வசித்து வருகிறார். இவர் வசித்து வரும் பகுதிகளில் திடீரென புகுந்த சில கும்பல் அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் காவி பெயிண்ட் அடிக்க தொடங்கியுள்ளனர். வீட்டின் உரிமையாளர்கள் தடுத்தும் கேட்காமல் அவர்கள் காவி பெயிண்ட் அடித்துள்ளனர். இதுகுறித்து பலர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் கோபால் நந்தி “வழக்கு பதிவு செய்ததற்கு பின்னால் சதி உள்ளது. வீடுகளுக்கு முழுவதுமாக காவி வண்ணம் அடிக்கப்படவில்லை. சிவப்பு, பச்சை, சாக்லேட் வண்ணங்களும் அடிக்கப்பட்டன. நகரத்தின் வளர்ச்சி பணிகளுக்காக செய்த இந்த செயலை வைத்து சிலர் அரசியல் செய்கிறார்கள். இது என்னுடைய தெருவில் மட்டுமல்லாமல் நகரம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணியாகும்” என்று கூறியுள்ளார்.