ட்ரம்ப்க்கும், புதினுக்கும் இடையே மாட்டிக் கொண்டாரா மோடி?: பிரதமரின் ரஷ்ய பயணம்
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (11:33 IST)
ஜி7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி ரஷ்யாவில் நடைபெறும் பொருளாதார மாநாட்டிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.
சென்ற வாரம் வல்லரசு நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் பிரதமர் மோடி. அங்கே இயற்கை பாதுகாப்பு, சுற்றுசூழல் குறித்து அவர் உரையாற்றினார். பிறகு அமெரிக்க அதிபட் ட்ரம்ப் உடன் இணைந்து பேட்டியளித்தார். அப்போது அவர்கள் சகஜமாக நண்பர்களை போல் பேசி கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் ட்ரெண்டிங் ஆனது.
தற்போது ரஷ்யாவில் நடைபெறும் கிழக்கு மாகாண பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார் பிரதமர் மோடி. இந்த பயணத்தில் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதினுடன் அணுசக்தி, வர்த்தகம் குறித்து பிரதமர் ஆலோசிக்க இருக்கிறார்.
இந்த சந்திப்பில் இந்தியாவில் கூடம்குளம் தவிர்த்து மேலும் 6 இடங்களில் அணு உலை அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது. விண்வெளி மற்றும் அணுசக்தி துறையை பிரதமரே நிர்வகித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு அமெரிக்காவுக்கு பிடித்தமானதாக இல்லை.
விண்வெளி ஆராய்ச்சி, ராணுவ தளவாடங்கள், அணு உலை என பல துறைகள் ரீதியாக ரஷ்யாவுடன் நல்ல உறவு நிலையை கொண்டிருக்கிறது இந்தியா. தற்போதைய நிலையில் அனைத்து நாடுகளும் இந்தியாவோடு ஏதாவதொரு வகையில் உறவுநிலையில் நீடித்து வருகின்றன.
ஜி7 மாநாடு முடிந்த கையோடு ரஷ்யாவுக்கு சிறப்பு விருந்தினராக மோடியை ரஷ்ய பிரதமர் அழைத்திருப்பது அமெரிக்காவை சீண்டி பார்க்கும் நோக்கத்தில் இருக்கலாம் என உலக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் ரஷ்யாவோடு ஏற்கனவே பல்வேறு ஒப்பந்தங்கள் நிலுவையில் இருப்பதால் அவற்றை புதுப்பிக்கும் நோக்கத்துடனே பிரதமரின் இந்த பயணம் அமைய இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.