முன்னாள் பிரதமர் இந்திராகாந்திக்கு பின் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாரமன், இன்று தனது முதல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் எதிர்பார்க்கும் வருமானவரி உச்சவரம்பு உயருமா? என்பது இன்னும் சிலமணி நேரங்களில் தெரிந்துவிடும். அதேபோல் பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் என்ற அறிவிப்பு இன்றைய பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கு தொழில் தொடங்க வட்டியில்லா கடன், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார வசதி பெறுபவர்கள் எண்ணிக்கையை அதிகமாக்கும் அறிவிப்பு, ஜிஎஸ்டியில் பதிவு செய்த நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டம் ஆகிய அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட்டை அனைத்து முக்கிய தொலைக்காட்சிகளும் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. மேலும் ஜூலை 26ஆம் தேதி வரை இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்பதும் அப்போது பட்ஜெட் மீதான அவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.