தென்னிந்தியாவில் ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபடும் தலமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் இருந்து வருகிறது. கொரோனாவிற்கு முன் கணக்கற்ற பக்தர்கள் தினம்தோறும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கொரோனா காரணமாக இலவச தரிசனம் மற்றும் முன்பதிவு தரிசனம் ஆகியவை எண்ணிக்கை அடிப்படையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் தினம்தோறும் நடைபெறும் சுப்ரபாதம், அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளை நேரில் பார்க்கவும், ஒருநாள் முழுவதும் கோவிலில் இருந்து தரிசிக்கவும் சிறப்பு டிக்கெட்டை அறிமுகப்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான சிறப்பு டிக்கெட் சாதாரண நாட்களில் ரூ.1 கோடியும், வெள்ளிக்கிழமைகளில் ரூ.1.50 கோடியும் என தேவஸ்தானம் நிர்ணயித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.