கேரள மாநிலம், வயநாடு பகுதியில் பெருமழை காரணமாக கடந்த 30-ம் தேதி அதிகாலை நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதன்காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 11-வது நாளாக நேற்று மீட்புப் பணி நடைபெற்றது.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதே போன்று பிரதமர் மோடி பேரழிவின் தீவிரத்தை நேரில் பார்வையிட்ட பின்னர், அதை தேசிய பேரிடராக அறிவிப்பார் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடரை, தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 2013ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான பிரதமர் மன்மோகன் சிங், இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என கூறியிருந்தார்.