24 இடங்களில் வைக்கப்பட்ட வெடிகுண்டு..? ஒன்னு கூட வெடிக்கல! - சுதந்திர தின விழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Prasanth Karthick

வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (11:08 IST)

நேற்று இந்தியா முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்ட நிலையில் அஸாமில் 24 இடங்களில் வெடிக்குண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து இந்தியா சுதந்திரமடைந்த ஆகஸ்டு 15ம் நாள் ஆண்டுதோறும் சுதந்திர தினமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்றும் நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பும் கெடுபிடியாக இருந்தது.

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அஸாம், மணிப்பூர், திரிப்புரா உள்ளிட்ட பகுதிகளிலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சில ஊடக நிறுவனங்களுக்கு அஸாமை தலைமையகமாக கொண்டு இயங்கும் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி ULFA(I) என்ற அமைப்பிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

அதில் அஸாமில் சுதந்திர தினத்தன்று 24 இடங்களில் வெடிக்குண்டுகளை வைத்ததாகவும், அவை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிக்குள் வெடிக்கும் படி செட் செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த குண்டுகள் வெடிக்கவில்லை என்றும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டிருந்துள்ளது.
 

ALSO READ: தமிழகம் முழுவதும் சாராய ஆறு ஓடிக் கொண்டு இருக்கிறது.. அறப்போர் இயக்கம் ஆவேசம்...!
 

இதையடுத்து பாதுகாப்பு படையினர், காவல்துறையினர் அஸாம் தலைநகரம் கவுஹாத்தி உள்ளிட்ட முக்கிய நகரங்களின் பல பகுதிகளில் சோதனை நடத்தினர். ஆனால் அதில் வெடிக்குண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. சில இடங்களில் வெடிக்குண்டு போன்ற சில பொருட்கள் கண்டறியப்பட்டாலும் அதில் வெடிக்கும் வகையிலான எதுவும் இல்லாமல் சில வயர்கள் மட்டும் இணைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அசாமில் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.

 

இந்த செயலை செய்த அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி ULFA(I) என்ற அமைப்பு, அசாமை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் அசாமில் செயல்பட்டு வரும் அமைப்பு ஆகும். அதனால் இந்திய விடுதலையை கொண்டாடும் சுதந்திர தின விழாவை சீர்குலைக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்