பொன்முடிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு..! உச்சநீதிமன்ற உத்தரவு..!!

Senthil Velan

திங்கள், 11 மார்ச் 2024 (14:58 IST)
சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
2006 - 2011ஆம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
 
அந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து 2016ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்தது.
 
அத்துடன், சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
இதனிடையே, சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த  தண்டனையை எதிர்த்து, பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மார்ச் 4-ம் தேதிக்குள் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கவும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
 
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளதுஇதன் மூலம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ALSO READ: டெஸ்ட் தரவரிசை பட்டியல்... 2-வது இடத்துக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா..!

சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், திருக்கோவிலூர் சட்டமன்றத்திற்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெறுமா? சட்டமன்ற உறுப்பினராக மற்றும் அமைச்சராக பொன்முடி தொடர்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்