டெல்லியில் ஆக்கிரமிப்புகளை இடிக்க தற்காலிக தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு!

புதன், 20 ஏப்ரல் 2022 (11:20 IST)
டெல்லியில் கலவரம் நடந்த ஜஹாங்கீர்புரி பகுதியில் ஆக்கிரமிப்புகளை இடிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த சில நாட்கள் முன்னதாக நாடு முழுவதும் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்ட நிலையில் டெல்லியிலும் கொண்டாடப்பட்டது. அப்போது அனுமன் ஜெயந்தி ஊர்வலம் ஜஹாங்கீர்புரி பகுதியில் சென்றபோது சில இஸ்லாமியர்கள் கற்களை வீசி தாக்கியதால் மோதல் வெடித்தது.

இந்த மோதல் சம்பவத்தை போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியும், புகை குண்டு வீசியும் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வன்முறை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லி போலீஸாருக்கு உத்தரவிட்ட நிலையில் 3 சிறுவர்கள் உட்பட 24 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் மோதல் வெடித்த ஜஹாங்கீர்புரி பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை இடிக்க டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஜஹாங்கீர்புரி பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி மாநகராட்சி அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவசர மனு அளிக்கப்பட்ட நிலையில், அதை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை இடிக்க இடைக்கால தடை விதித்துள்ளது. நாளை இந்த வழக்கை முழுவதும் விசாரித்து தீர்ப்பு வழங்கும்வரை இந்த நிலை தொடர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்