முதல்வர் தரப்பினர்களால் கொலை மிரட்டல்: தேர்தல் போட்டியிடும் நடிகை குற்றச்சாட்டு

செவ்வாய், 26 மார்ச் 2019 (07:04 IST)
மறைந்த பிரபல கன்னட நடிகரும் முன்னாள் எம்பியுமான அம்ரிஷ் மனைவியும் நடிகையுமான சுமலதா, கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் சுமலதாவிற்கு கன்னட திரையுலகின் முக்கிய நடிகர்கள் ஆதரவு அளித்துள்ளனர். அதுமட்டுமின்றி பாஜகவும் இந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்தாமல் சுமலதாவுக்கு ஆதரவு என அறிவித்துள்ளது.
 
எனவே சுமலதா வெற்றி உறுதியாகிவிட்டதாகவே மாண்டியா களநிலவரம் கூறுகிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் நடிகை சுமலதா புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னுடைய வீட்டை போலீசார் கண்காணிப்பதாகவும், வீட்டுக்கு வருவோரை, 'வீடியோ' எடுப்பதாகவும், தன் தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் குமாரசாமி தரப்பில், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், எனவே தனக்கு தக்க பாதுகாப்பு அளிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி கூறியுள்ளது. இந்த நிலையில் குமாரசாமியின் மகன் நிகில் வெற்றிக்காக மதச்சார்பற்ற ஜனதா தள பிரபலங்களும், காங்கிரஸ் பிரபலங்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்