ஜெயலலிதா வழக்கை போல 2ஜி வழக்கு மாறும்: சுப்பிரமணியன் சுவாமி ஆரூடம்!
வியாழன், 21 டிசம்பர் 2017 (13:55 IST)
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை வழக்கு தீர்ப்பில் கனிமொழி, அ.ராசா உள்ளிட்ட அனைவரையும் குற்றமற்றவர் என தீர்ப்பளித்து விடுவித்துள்ளது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை திமுக, காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். தங்கள் மீது சுமத்தப்பட்ட பொய் குற்றப்பழியை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் துடைத்துவிட்டோம் என கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தீர்ப்பு இறுதியானது அல்ல, உச்ச நீதிமன்றம் சென்று இந்த தீர்ப்பை ரத்து செய்வோம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கருத்து கூறியுள்ளார்.
Congis and Allies celebrated JJ HC acquittal. Then in SC got deflated. Same will be here.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் இந்த தீர்ப்பை கொண்டாடுகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. பின்னர் உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்து குற்றவாளி என தீர்ப்பளித்தது. அதே போல இந்த வழக்கிலும் நடைபெறும் என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
மேலும் என்னுடைய தனிப்பட்ட புகாரின் அடிப்படையில் குற்றவியல் நடைமுறை சட்டம் 210-இன் படி அரசு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் மூலம் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.