திமுக எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்திற்கு வந்தபோது "தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்" என்ற வாசகங்களுடன் எழுதப்பட்ட டிஷர்ட்களை அணிந்திருந்தனர். அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா கண்டிப்பை தெரிவித்தார்.
இது போன்ற நடவடிக்கைகள் அனைத்தும் அவை நடைமுறைக்கு எதிரானவை என்றும், எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், அக்கட்சியின் உறுப்பினர்கள் கண்ணியமற்ற உடையுடன் வரக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, "வெளியே சென்று உங்கள் உடைகளை மாற்றிக்கொண்டு சரியான உடையுடன் திரும்புங்கள்" எனவும் அவர் அறிவுறுத்தினார்.
சபாநாயகர், நண்பகல் 12 மணி வரை அவையை ஒத்திவைத்ததாக அறிவித்தார். ஆனாலும், திமுக எம்பிக்கள் அதே உடையில் மீண்டும் திரும்பியதை கண்டித்து, பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டதாக அறிவித்தார்.
ஏற்கனவே, எதிர்க்கட்சியின் எம்பிக்கள் எல்லை நிர்ணயம் தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்ட டிஷர்ட்களை அணிந்திருந்தபோதும், அதற்கும் சபாநாயகர் கண்டிப்பு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.